தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகளினால் தமிழக அரசியல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
இதைத் தொடர்ந்து, இபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லிக்கு வரவழைத்து தொகுதி பங்கீட்டை ஓரளவு இறுதி செய்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக, பாமக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கேட்ட தொகுதிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை தராததால், என்டிஏ கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பங்கீட்டின்படி, மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்திலும் புதிய நீதி கட்சி போட்டியிட உள்ளது என்று தெரிவித்தார்.
