19வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
போட்டி தொடங்கும் முன், கடந்தாண்டு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில், ஆர்சிபி அணி வீரர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட், இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 203 ரன்கள் அடித்து எளிதில் இலக்கை எட்டியது. இதன் மூலம், ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தொடரில் அதன் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷண், பெங்களூரு அணிக்கு எதிராக அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, 27 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இதன் மூலம், 113 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 3,000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதில் 18 அரை சதங்கள், ஒரு சதம் அடங்கும்.
ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 8வது முறையாக இடம் பெற்று, அதற்கு முன்பு, கடந்த 2014 – 2021 வரை ஐதராபாத் அணிக்காக 7 முறை விளையாடிய டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்தார்.
நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் ஆர்சிபி அணி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.


