ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்தும் நடத்தும் தாக்குதல் 30 நாட்களைக் கடந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பதற்ற சூழலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் முக்கிய நீர் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை நேற்றைய நிலவரப்படி பேரல் ஒன்று 99 அமெரிக்க டாலராக உள்ளது. இதனால், உலகளவில் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும், பல்வேறு நகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, உணவகங்களில் விலையேற்றமும், உணவகங்கள் மூடப்பட்டும் வருகின்றன.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்ற கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதித்தது. இருப்பினும், வளைகுடா பகுதியில் இந்திய கடற்படை ‘ஆபரேஷன் சங்கல்ப்’ கீழ், இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
கடந்த பிப்.28ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் 22 இந்தியக் கப்பல்கள் பெர்ஷியன் வளைகுடாவில் சிக்கியிருந்த நிலையில், மத்திய அரசு, தூதரக ரீதியாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, சிவாலிக், நந்தா தேவி, ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் ஆகிய 4 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை வந்தடைந்துள்ளன.
போர் நிறுத்தத்தினால், மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் சூழலில், 94,000 டன் எல்பிஜி எரிவாயு நிரப்பிய பிடபிள்யூ.டி.ஒய்.ஆர். மற்றும் பிடபிள்யூ. இ.எல்.எம். ஆகிய 2 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து இந்தியாவை நோக்கிப் பயணித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், பிடபிள்யூ.டி.ஒய்.ஆர். கப்பல் நாளை (31ம் தேதி) மும்பை துறைமுகத்தையும், பிடபிள்யூ. இ.எல்.எம். கப்பல் ஏப்.1ம் தேதி நியூ மங்களூரு துறைமுகத்தையும் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கொண்டு வரப்படும் எல்பிஜி, நாட்டின் ஒருநாள் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானது என்று தெரிகிறது.
இதன் மூலம், ஹோர்முஸ் நீரிணையின் மேற்கு பகுதியிலிருந்து 6 கப்பல்களும் கிழக்கு பகுதியில் இருந்து 2 கப்பல்களும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பாக இந்தியா வந்திருக்கிறது.
இதற்கிடையே உள்நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், எல்பிஜியிலிருந்து குழாய்வழி (பைப்லைன்) இயற்கை எரிவாயுவுக்கு மாறுவதை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.


