சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழலலினால், தனியார் நிறுவனங்கள் அவற்றின் பிரீமியம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன.
அதே போல், வீட்டு உபயோக எரிபொருள் சிலிண்டர் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. வர்த்தக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாத போதும் அதன் வினியோகத்தில் பற்றாக்குறை நிலை ஏற்பட்டது.
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஓட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்தது.
இந்நிலையில், இன்று வர்த்தக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (ஏப்.1) 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை அதிரடியாக ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, உணவு பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. அதே நேரம், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரினால் சிலிண்டர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன் மட்டுமின்றி, விலை உயரக்கூடும் அச்சத்தை பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.


