சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முக்கிய முனையமாக எழும்பூர் ரயில் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், எழும்பூர் நிலையத்தின் மறுபுறத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவையும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு ரூ.820 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டு முதல் எழும்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டவாள மேம்பாட்டு பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக 10, 11வது தண்டவாளங்களில் இயங்கிய ரயில்கள் தற்காலிகமாக 5 மற்றும் 6வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் வேகக் குறைவு, இடைநிறுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டதால், 50க்கும் மேற்பட்ட சேவைகள் குறைக்கப்பட்டன.
இதனால் ஏற்பட்டுள்ள பயணிகள் சிரமத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள், 20 சிறப்பு ரயில்கள் மற்றும் வேளச்சேரி – பரங்கிமலை சேவை இயக்கப்பட்டது.
குறிப்பாக, 10 மற்றும் 11வது தண்டவாளங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் எனவும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் வரும் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் தொடங்கும் என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேம்பால பணிகள் காரணமாக 10 மற்றும் 11வது நடைமேடைகள் மூடப்பட்டு, தற்காலிக அட்டவணை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டன. மேம்பாலத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும் எனவும், சாய்வு பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த 15 நாட்களில் நிறைவு பெறும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்த பணிகள் நிறைவடைய உள்ளதால், வழக்கமான ரயில் சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என ரயில் பயணிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


