தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 9ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி 5 மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கேரள தேர்தலில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குப்பதிவுச் சதவிகிதம், பெருமளவில் சரிவைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 2.25 லட்சம் வெளிநாட்டு வாக்காளர்களில், பெரும்பான்மையானோர் இந்த முறை வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், தாயகம் திரும்ப வாய்ப்பில்லை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதனால், கேரள தேர்தலில் வழக்கமாக பதிவாகும் 60% வாக்குப்பதிவில் 10% வரை குறையக்கூடும் என்றும் சில அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போரினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, வளைகுடா- கேரளா வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் ஏறக்குறைய ரூ.60,000க்கும் மேலாக, 4 மடங்குவரை உயர்ந்துள்ளன. முன்னதாக, விமானக் கட்டணங்கள் பொதுவாக ரூ. 8,695 முதல் ரூ. 13,881 (350–550 ரியால்) வரை இருந்தன.
தற்போது, தேர்தல் காலத்தில், ரூ. 61,907 (2,500 ரியால்) கடந்து உயர்ந்துள்ளது. இதற்கு, எரிபொருள் விலை உயர்ந்திருப்பதும் ஒரு காரணமாகும்.
இதன் காரணமாக, பெருமளவிலான வாக்காளர்கள் இந்த தேர்தலுக்கு வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வட கேரளாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அங்கு வாக்கு வித்தியாசம் பெரும்பாலும் மிகக் குறைவாக இருப்பதுடன், வெளிநாட்டு வாக்காளர்களின் வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.
வாக்களிப்பு விகிதத்தில் ஏற்படும் சிறிய சரிவு கூட தேர்தல் கணக்கீடுகளை கணிசமாக மாற்றக்கூடும். கண்ணூர் முதல் பாலக்காடு வரை பரந்துள்ள சுமார் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெளிநாடு வாழ் கேரள வாக்காளர்கள் நீண்ட காலமாக குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றனர்.
எனவே, வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய சரிவு, அரசியல் கட்சிகளிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, கடும் போட்டி நிலவும் மலபார் பகுதியில், ஒவ்வொரு வாக்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.
இந்த சவால்கள் நீடிக்கும் நிலையிலும், வெளிநாடு வாக்காளர்கள் வாக்களிக்கக் கட்டாயம் கேரளாவுக்கு வருவார்கள் என அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.


