ஏப்ரல் 1, 2026 முதல் திருத்தப்பட்ட பான் விண்ணப்ப விதிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பான் விண்ணப்பச் செயல்முறையில் தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட படிவம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முந்தைய படிவம் 49ஏ-க்கு பதிலாக படிவம் 93-ஐ நிரப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் படிவம் 49ஏஏ-க்கு பதிலாக படிவம் 95-ஐ பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பான் விண்ணப்பத்திற்கு ஆதார் மட்டும் இனி போதாது. புதிய விதிகள் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆதார் அட்டையை மட்டும் கொண்டு பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் ஆதார் கார்டுடன் கூடுதலாக பிறந்த தேதி சான்று அளிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் செல்லுபடியாகும் பிறந்த தேதி சான்றாக, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், பான் கார்டில் உள்ள பெயர் ஆதார் பதிவில் உள்ளபடியே இருக்கும். இதன் விளைவாக, பெயரில் எந்தப் பொருத்தமின்மைக்கோ அல்லது மாற்றத்திற்கோ இனி வாய்ப்பில்லை.
இந்த மாற்றங்கள் அடையாளச் சரிபார்ப்பை வலுப்படுத்தவும், அரசாங்கப் பதிவேடுகளில் உள்ள தகவல்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ பான் விண்ணப்ப இணையதளத்திற்குச் சென்று NSDL அல்லது UTIITSL என்ற சரியான படிவத்தைத் தேர்ந்தெடுத்து, படிவம் 93 (இந்திய விண்ணப்பதாரர்களுக்கு) படிவம் 95ல் (வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு) பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.
பின்னர், அடையாளச் சரிபார்ப்புக்கு ஆதார் விவரங்களை வழங்கவும். ஆதார் மற்றும் பிறந்த தேதி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, ஒப்புகை எண்ணைச் சேமித்து கொள்ளவும்.
அதன் பிறகு, விண்ணப்பத்தின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, பான் கார்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதை அல்லது பெறப்பட்டதை உறுதிப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


