தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கடையை இரவில் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக 2020 ஜூன் 19ம் தேதி, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
பின்னர் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில், கடந்த 2020 ஜூன் 29ம் தேதி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இதனை கொலை வழக்காக பதிவு செய்த சிபிஐ போலீசார், அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், பால்துரை விசாரணையின் போது இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் பெண் காவலர்கள் பியூலா, ரேவதி மற்றும் எஸ்ஐ ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2,027 பக்கங்கள், 2ம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், கடந்த மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாலேயே காவலர்கள் தாக்கியுள்ளனர். இந்த மரணங்கள் கொலைதான் என தடய அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம், 9 பேரின் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை குற்றவாளிகள் என தீர்மானிக்கப்படுகிறது. அவர்களது தண்டனை விபரங்கள் வரும் 30ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறி ஒத்திவைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் அனைவருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் மன நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தண்டனை விவரம் அறிவிப்பதற்கு முன்னதாக இறுதி கோரிக்கை குறித்த இரு தரப்பு வாதம் நடைபெற்றது. அப்போது, காவலர்களின் முந்தைய நடத்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி முத்துக்குமரன், பரவலாக கவனிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் தண்டனை விவரத்தை நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் அறிக்கையை கேட்டால் ஏன் தாமதம் ஆகிறது.
அறிக்கை வந்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுளா, ஆயுளா, தூக்கு தண்டனையா என்பதை முடிவு செய்ய முடியும். அறிக்கை தாக்கல் செய்வதில் என்ன தாமதம்?” என கேள்வி எழுப்பி, தண்டனை விவரத்தை ஏப்.2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் கடந்த வியாழக்கிழமை (ஏப்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவலர்கள் 9 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு எவ்வளவு தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரை மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேரிடமும் தனித்தனியாக அவர்களது கருத்தை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது குற்றவாளிகள் 9 பேரும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாக்கவில்லை. எதிர்பாராத விதமாக நடந்த உயிரிழப்பு. தங்களது குடும்ப நலன், பெற்றோர் நலன் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதி ஒவ்வொருவரின் குடும்பச்சூழல், குடும்பச்சொத்து, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை தனித்தனியாக கேட்டு பதிவு செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 9 பேரின் வழக்கறிஞர்கள் தனித்தனியாக வாதிட்டனர். இது அரிதினும் அரிதான வழக்கு இல்லை. தூக்குதண்டனை என்பது தீர்வாகாது. அவர்கள் திருந்தி வாழும் வகையில் தான் தண்டனை இருக்க வேண்டும். ஒருவன் திருந்தவே மாட்டான், இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியே இல்லாதவன் என்ற முடிவுக்கு வரும்போதுதான் தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். எனவே தண்டனையை குறைத்து வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நேரடி கண்ணுற்ற சாட்சிகள் உட்பட பல்வேறு அறிவியல் பூர்வமான சாட்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பாவிகளை காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியதால் ஒட்டுமொத்த சமுதாயமே அதிர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
மேலும், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன் ஆஜராகி, எந்த தப்பும் செய்யாத தனது கணவரையும், மகனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்து விட்டார்கள். தனது கணவர் மற்றும் மகன் மீது இதற்கு முன் எந்த ஒரு சிறு வழக்கு கூட கிடையாது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. எனவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க முறையீடு செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விவரம் இன்று வெளியானது. அதன்படி, தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கி உள்ளனர். ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை உயிரிந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், அவ்வூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.


