தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, சந்தீப் மிட்டலை நியமித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக, நாதக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் இத்தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் அறிவிப்பு நேரத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தமிழகத்தில் நேர்மையான, திறமையான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளனர். அவர்கள் தேர்தல் வரை நியாயமாக நடந்து அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்துவார்கள். இதனால் அவர்களை மாற்றிவிட்டு நமக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் சொல்லி, அவர்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், ஈரோடு, கரூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி வெங்கட்ராமன், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தரம் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனராக சஞ்சீவ்குமார், மதுரை கமிஷனராக தீக்ஷித், மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் திடீரென மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக நேற்றிரவு 8 மணிக்கு புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, அவருக்கு முதல்வரின் செயலாளராக பணியாற்றினார். இதனால் அவரை தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டதால் தற்போது அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல், ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். இவர் மத்திய அரசு பணியில் இருந்தபோது துணிச்சலாக சமூகவலைதள பக்கங்களில் ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துகளை வெளியிட்டு வந்தார். பின்னர் தமிழக அரசு பணிக்குத் திரும்பினார். அவர் மத்திய அரசின் ஆதரவாளராக இருந்ததால் ஆரம்பத்தில் கடலோர காவல்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர், சில போலீஸ் அதிகாரிகளின் துணையுடன், சைபர் கிரைம் ஏடிஜிபியாக பவர்புல் பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே துறையில் நியமிக்கப்பட்டார். தற்போது இவர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்குப் பதிலாக ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பணியில் ஆயுதப்படை போலீசார் நேரடியாக ஈடுபடுத்தப்படுவதால், அப்பிரிவின் இயக்குநராக இருந்த டேவிட்சன் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லஞ்ச ஒழிப்புத்துறையை மட்டும் தனியாக கவனித்திருந்தால் மாற்றப்பட்டிருக்க மாட்டார். தற்போது 2 முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மேலும், பல போலீஸ் உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும், தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் தமிழக அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் தலைமைச் செயலாளரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால் தங்களுக்கு விருப்பமான அதிகாரிகளை நியமித்து, தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று அதிமுக கருதுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அண்மையில், டிஜிபி உள்பட 14 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மாற்றிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


