தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாகவும் மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும், 2வது கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்.29ம் தேதியும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி, இம்மாநிலங்களில் அரசியல் களத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பரப்புரை வேட்புமனு தாக்கல், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் மும்முரமாக இருந்தது. இம்மாநிலங்களில் தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 3 மாநிலங்களிலும் பதற்றமான தொகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


