தொகுதி மறுசீரமைப்பு மசோதா சீர்திருத்தம் அல்ல அதிகாரத்தை பறிக்கும் முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவானது, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற பாஜகவின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக இருப்பதாகவும் தொகுதி மறுவரையறை நடவடிக்கை, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைத் தண்டிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இது வட மாநிலங்களின் அரசியல் பலத்தை உயர்த்தி, தென்னகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்கி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் எனவும் தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையிலேயே மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை வழங்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஓபிசி பிரிவினருக்கான முறையான பிரதிநிதித்துவம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கு எதிரானது எனப் பதிவிட்டுள்ள அவர், வளர்ச்சி அடைந்த இந்தியா என ஒருபுறம் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகளாகக் கிரீமிலேயர் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயில் இருந்து மாற்றாமல் இருப்பது ஓபிசி பிரிவினருக்கு செய்யும் அநீதி எனவும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா சீர்திருத்தம் அல்ல அதிகாரத்தை கைப்பற்றும் பாஜகவின் முயற்சி என்றும் சாடியுள்ளார்.


