19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஆர்ஆர்-ஆர்சிபி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து சற்று கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆர்ஆர் அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபியை கதிகலக்கினார். இருவரின் அதிரடியான ஆட்டத்தில் 18 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 78 ரன்களும், ஜுரல் 81 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
நடப்பு சீசனில் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காத ஆர்ஆர் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. வைபவ் சூர்யவன்ஷி இந்த போட்டியில் 3 சாதனைகளை படைத்தார்.
முதலாவதாக, நேற்றைய போட்டியில் 15 பந்துகளில் அவர் அடித்த அரைசதம் இந்திய வீரர் ஒருவர் அடித்த 3வது அதிவேக அரைசதமாகும். இதே சாதனையை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே அணிக்கு எதிராக படைத்திருந்தார். சக வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவதாக, பவர்பிளேயில் அரைசதங்கள் அடிப்பதில் ஜாம்பவான் ஜோஸ் பட்லரின் சாதனையை வைபவ் சமன் செய்தார். இதில், சக தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உட்பட நான்கு வீரர்களை வைபவ் முந்தினார். பவர்பிளேயில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் 3 முறையாக இருந்த நிலையில், தற்போது சூர்யவன்ஷியும் 3 முறை அரைசதம் அடித்து சமன் செய்துள்ளார்.
மூன்றாவதாக, வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளுக்கும் குறைவான நேரத்தில் அதிக அரைசதங்கள் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் மெக்குர்க்கின் சாதனையை சமன் செய்தார். இது 20 பந்துகளுக்கும் குறைவான நேரத்தில் அவர் அடித்த 3வது ஐபிஎல் அரைசதமாகும். ஐபிஎல்லில் 20 பந்துகளுக்கும் குறைவான நேரத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச அரைசதங்கள் நிக்கோலஸ் பூரன் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 4 முறையும், அவர்களுக்கு அடுத்ததாக வைபவ் சூர்யவன்ஷியும் உள்ளனர்.
இவை தவிர, ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில், ஒரு சதம் மற்றும் 4 அரைசதம் அடித்துள்ளார் சூர்யவன்ஷி. இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 266 என்ற அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர, இந்தத் தொடரில் அதிகபட்சமாக 18 சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேனும் இவரே.


