சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒரு நாள் விலை குறைவதும் மறுநாள் முந்தைய நாளின் விலையை விட அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. போதாக்குறைக்கு, காலையில் குறைவதும் மாலையில் விலை உயர்வதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200ம், கிராமுக்கு ரூ.25ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,100 ஆக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை நாள் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி சனிக்கிழமை விலையில் விற்பனையானது.
வாரத்தின் முதல் நாளான நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, கிராம் ரூ.14,060க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220 விற்பனையாகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி நேற்று 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.260 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற, இறக்கம் அதன் நிலையற்றத்தன்மை தங்கத்தில் முதலீடு செய்பவர்களை மட்டுமின்றி, நகை வாங்கும் தேவையில் உள்ள நடுத்தர மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


