தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக தனித்துப் போட்டி என 4 முனை போட்டி நிலவிய நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணி வரவால் தற்போது 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் கூடுதல் தொகுதி, ஆட்சியில் அதிகாரம் போன்ற கோரிக்கைகளினால் நீண்ட இழுபறிக்கு பின்னரே தொகுதி பங்கீடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதே நேரம், கடந்தாண்டு ஏப்ரலில் உறுதிபடுத்தப்பட்ட அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்ட இழுபறி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னரே முடிவுக்கு வந்தது.
அதன்படி, தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்களை மட்டுமே இபிஎஸ் ஒதுக்கியுள்ளார்.
தற்போது, தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக முன்னாள் தேசியத் தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ‘’புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026″ என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
இதன் போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
