மக்களவை,மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை 543 ல் இருந்து 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் இத்திட்டத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 2023ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது.
இந்நிலையில், வரும் 2029 பொதுத்தேர்தலில் இதனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, மே.வங்க சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் நாளை முதல் 3 நாட்கள் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மக்களவையில் விவாதத்திற்கு வரும் 3 முக்கியமான மசோதாக்களில் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மசோதாவுக்காக அரசியலமைப்பின் 81வது பிரிவை அரசு திருத்த உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் வரைவு மசோதா எம்பிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களில் இருந்து நேரடி தேர்தல் மூலம் தேர்வாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 815 உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்வாகும் எம்பிக்களின் எண்ணிக்கை 35 இடங்களுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இதன் மூலம், நாட்டின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும்.
இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மாறிவரும் மக்கள்தொகை அமைப்புகளைச் சிறப்பாகப் பிரதிபலிப்பதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதை எளிதாக்கும் நோக்கில் இந்த இட அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு புதிய தொகுதி மறுவரையறை செய்வது இந்த முன்மொழிவின் மையமாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, 2026க்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
தற்போது, 2011 கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடும்.
அதே நேரம், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத உ.பி, பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு இந்த தொகுதி மறுவரையறை சாதகமாக இருக்கும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகளிருக்கான ஒதுக்கீட்டிற்குள் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
நாரி சக்தி வந்தன் அதினியம் என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டம், 2023ஐத் திருத்தும் 131வது அரசியல் சட்ட திருத்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள 3 மசோதாக்களாகும்.
