தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தவெக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவி வந்த நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனையொட்டி, அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் பரப்புரையை பாமக நிறுவனர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான அருளை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையை முடித்து மேடையில் இருந்து இறங்கியபோது திடீரென மயக்கமடைந்தவரை அவரது மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு காரில் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமதாஸ் மேல்சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு காரில் அழைத்து வரப்பட்டார். அவருடன் மகள் ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி உள்ளிட்டோரும் சென்றனர்.
அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
அங்கு சிறப்பு மருத்துவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று மாலை ராமதாஸ் அப்போலோ மருத்துவமனையில் இருந்தது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


