தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுவரை, ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கான தேதி இறுதி செய்யப்படாமல் இருந்தது. முதல்வரின் பிரசாரத்துக்கு ஏற்றவாறு தேதியை முடிவு செய்வதற்கான நடவடிக்கையில் திமுக, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
இதனிடையே, இன்று முதல் வரும் 18ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவு பற்றிய விவாதம் தொடங்குகிறது. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரத்தை 20, 21ம் தேதிகளில நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை மறுநாள் தேர்தல் பரப்புரைக்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். அப்போது அவர் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஏப்.20ம் தேதி ராகுல் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாகவும் அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும், ஆனால் எந்த இடம், நேரம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வரும் 20ம் தேதி தமிழகம் வருகை தரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

