தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் கடந்த 30ம் தேதி தொடங்கிய முதல் வேட்புமனு தாக்கல் ஏப்.6ம் தேதியுடன் முடிவடைந்தது.
தவெக தலைவர் விஜய் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாகசென்று கொடுங்கையூரில் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கி, பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு புறப்பட்டார்.
விஜய் புறப்பட்ட செய்தி அறிந்து கொளத்தூரில் தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் பெரம்பூரில் இருந்து கொளத்தூருக்கு ஊர்வலமாக தனது பிரசார வாகனத்தில் ரோடு ஷோ நடத்திக் கொண்டே சென்றார்.
இதனால் இரண்டரை மணி நேரம் கழித்தே விஜய் கொளத்தூர் அகரம் சந்திப்பிற்கு சென்றார். அங்கு அவர் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
போலீசார் குறித்து கொடுத்த குறிப்பிட்ட இடத்தில் பிரசார வாகனத்தை நிறுத்தாமல் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி பேசியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து, இறுதி நேரத்தில் தனக்கும், பொதுமக்களுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லை எனக் கூறி அனுமதி பெறப்பட்ட நிலையில், வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு புறப்பட்டார்.
இதனிடையே, தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரி, இந்த பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வீடியோ ஆதாரங்களுடன் அளித்த புகாரில் தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் என்.ஆனந்திற்கு ஆதரவாக விஜய் பரப்புரை மேற்கொண்டார். தி.நகரில் ரோ ஷோ நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மக்கள் கூடியதாகவும், அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த புகார்களின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி ரோட் ஷோ நடத்தி பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துதல், தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஜய் மீது மாம்பலம், வள்ளுவர் கோட்டம், வேப்பேரி காவல் நிலையங்களில் தனி தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

