தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. மே மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அதிமுக, திமுக, தவெக, நாதக, சசிகலா – ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில், பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில், ஒரு தொகுதியில் இரட்டை இலை, மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்து, மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், மதுரை மத்திய தொகுதியில் மட்டும் அவர் பிரசாரம் செய்யவில்லை. இது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்குச் சொந்தக் கட்சியிலேயே எந்தளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக கூறினார்.
தொடர்ந்து, பிரேமலதா குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அண்ணியார் வெளியில் திமுக கூட்டணியில் இருந்தாலும் உள்ளே அதிமுக கூட்டணிக்கு உதவி செய்வதாகவே நினைக்கிறேன். நாங்கள் பேச வேண்டியதெல்லாம் அண்ணியார் பேசுகிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கஞ்சா கலாசாரம் பெருகியிருப்பதை முதல்வர் இருக்கக்கூடிய மேடையிலேயே பேசக் கூடிய தைரியமிக்க வீரப்பெண்மணியாக தான் அண்ணியாரை பார்க்கிறேன்.
மதுரை மத்திய தொகுதியில் இருக்கின்ற அனைத்து தெருக்களிலும் மின்விளக்குகள் எரியவில்லை. அப்புறம் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும், கஞ்சா புழக்கமும் இங்கு அதிகமாக இருக்கிறது. நான் வெற்றி பெற்றால் இருக்கும் அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.

