நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு ஆகிய 3 மசோதாக்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் விவாதிக்கப்பட்டது.
நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து விளக்கி பேசினார்.
இதனைத் தொடர்ந்து 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட 489 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், 278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன் காரணமாக, வாக்களித்ததில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறாததால், இந்த மசோதா தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்தது ஜனநாயகத்தின் வெற்றி என வயநாடு எம்.பி.யும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து பேசிய பிரியங்கா காந்தி, நேற்று நடந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும், கூட்டாட்சி அமைப்பை மாற்றி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இது அரசியலமைப்பு சட்டத்தின் வெற்றி, நாட்டின் வெற்றி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் வெற்றி என்றும் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை சதி என்று தான் நினைப்பதாகவும், பெண்களைப் பயன்படுத்தி எப்படியாவது அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிக்க பாஜக திட்டமிடுவதாகவும் குற்றம் சாட்டிய பிரியங்கா காந்தி, மசோதா நிறைவேற்றப்பட்டால், தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பாஜக கருதியதாகவும், மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்க்கட்சிகளைப் பெண்களுக்கு எதிரானவை என்று முத்திரை குத்தி, பெண்களின் மீட்பர்களாக மாறிவிடுவார்கள் எனவும் விமர்சித்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்த நாள், மத்திய அரசுக்கு கறுப்பு நாள். ஏனென்றால், மத்திய பாஜக அரசு முதல் முறையாக அதிர்ச்சியை உணர்ந்திருப்பதாகவும் இன்று பெண்களின் பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சாடினார்.
பெண்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர். பாஜகவின் அந்த மக்கள் தொடர்பு மற்றும் ஊடக ஆரவாரம் இனியும் எடுபடாது எனவும் அரசு உறுதியான ஒன்றை செய்ய விரும்பினால், 2023ல் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வரும்படியும் பிரியங்கா வலியுறுத்தினார்.

