தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 10, விசிகவுக்கு 8 உள்பட இதுவரை 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இன்று தமிழகம் வருகை தந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், திருச்சி துறையூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பாஜகவின் முகமூடியாக அதிமுக செயல்படுவதாகவும் ஊழல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி கூட்டணிக் கட்சிகளை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அதிமுக அமைச்சர்கள் தங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பாஜகவிடம் சரணடைந்துள்ளதாக கூறிய ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்ட முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும் எனவும் கொள்கைகளில் சமரசம் செய்யாதவர் மு.க.ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.
மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதி செய்வதாகவும், பாஜகவின் சதியை நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டின் வரலாறு, சமூகநீதி பாஜகவுக்கு எரிச்சலாக உள்ளதால் சாதி மற்றும் மதம் ரீதியாக மக்களை பிரிக்க முயற்சிப்பதாகவும் தமிழ்நாட்டின் சமூக நீதியை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் சமூக நீதி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொல்லப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்துவதாகவும் டிரம்ப் குதி என்றால் மோடி குதித்து விடுவார் எனவும் எஃப்ஸ்டீன் கோப்புகளை காட்டி பிரதமர் மோடியை அமெரிக்கா மிரட்டுவதாகவும், மோடி மற்றும் அதானிக்கு இடையேயான வர்த்தக தொடர்பு குறித்தும் அமெரிக்காவுக்கு தெரியும் எனவும் ராகுல் கூறினார்.

