தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், ஆம்னி பேருந்து கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி சூடு பிடித்துள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், வாக்களிக்கும் ஜனநாயக கடமையாற்ற சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள், நகரங்களில் பணிபுரிபவர்கள் பெருமளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அரசு தரப்பில 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து பயணிகளுக்கும் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், சென்னை முதல் மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் கட்டண உயர்வு அதிகமாக காணப்படுகிறது.
சாதாரண நாட்களில் இருப்பதைக் காட்டிலும், தற்போது கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

