தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 23ம் தேதி அன்று தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, மிக அதிகமான வாக்குப்பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காள பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப்பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜ, பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் உள்பட நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி. மே 4ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் அன்று, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, தேர்தல் நடத்தும் அலுவலரால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற வரையிலும், எக்காரணத்தை கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது.
தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும், நீங்கள் குறித்து வைத்திருக்கின்ற வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் சரியாக அறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமுடன் பார்க்க வேண்டும்.
அதிமுகவின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


