இந்தியாவில் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலைப் பெற்ற பகுதிகளில் புதுச்சேரியும் ஒன்றாகும். அங்கு தற்போதும் கூட பள்ளி, கல்லூரிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கென தனிப்பாடத்திட்டம் இல்லாத நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ்நாடு பாடத்திட்டமும், மாகி பகுதியில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பகுதியில் ஆந்திரா பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான், தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ நடைமுறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
புதியக் கல்விக் கொள்கையின் மூலம், மத்திய அரசு மும்மொழி பாடத்திட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, இரண்டு இந்திய மொழிகளையும், ஒரு வெளிநாட்டு மொழிகளையும் கற்க வேண்டும்.
இந்த நிலையில் தான், புதுச்சேரியில் 2026 – 2027ம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் இருந்து பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக கழக அமைப்பாளருமான இரா. சிவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’-ன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகக் கூறி, மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்க்கிறோம் என்ற பெயரில் மும்மொழிப் பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பை செயல்படுத்த பள்ளிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை வெளியான ஏழு நாட்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் இந்த முறையைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விவரங்களை உடனடியாக சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அனைத்து சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பில் மாணவர்கள் தேர்வு செய்யும் இந்த மூன்றாவது மொழிதான், பிற்காலத்தில் அவர்களின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான விருப்பத் தேர்வாக அமையும் என்று சிபிஎஸ்இ வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், முறையான பாடப்புத்தகங்கள் அரசு சார்பில் இன்னும் தயாராகாத நிலையில், உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்களைக் கொண்டே வகுப்புகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டாய நடைமுறையை சிபிஎஸ்இ இயக்குனர் டாக்டர் பிரக்யா எம். சிங் வலியுறுத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். குறிப்பாக, புதுச்சேரி மாநில மாணவர்கள் மீது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணிப்பது மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் செயலாகும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாணவர்களின் எதிர்காலத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான, எதேச்சதிகார முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


