தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, இது தொடர்பாக வழக்கு பதியும்படி, தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக, இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதே நேரத்தில், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவிட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழக அரசு, அமைச்சர் நேரு தரப்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நேரு தரப்பில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் முன், தனது தரப்பில் வாதங்களை முன் வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதால், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதையடுத்து, அரசு மற்றும் நேருவின் மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரையின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூன் 4வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


