தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78% மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், மே.வங்க 2ம் கட்ட தேர்தல் முடிவடைந்த சிறிது நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கின.
அதன்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தெரிய வந்துள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 169, அதிமுக கூட்டணி 64, தவெக ஒரு தொகுதியையும் கைபற்றும் என அக்னி நியூஸ் நிறுவன கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுக 43.1%; அதிமுக 34.8%; தவெக 15.1% வாக்குகளை பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மின்னம்பலம் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 155, அதிமுக கூட்டணி 72, தவெக 5, இதர கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 28, அதிமுக கூட்டணி 19, தவெக 3 தொகுதிகளை கைப்பற்றும். வடக்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 30, அதிமுக கூட்டணி 21, தவெக 0, மற்றவை 1 தொகுதிகளை கைப்பற்றும்.
தென்மண்டலத்தில் திமுக கூட்டணி 39, அதிமுக கூட்டணி 18, தவெக 0, மற்றவை 1 தொகுதிகளை கைப்பற்றும். சென்னை மண்டலத்தில் திமுக கூட்டணி 31, அதிமுக கூட்டணி 4, தவெக 2, மற்றவை 0 தொகுதிகளை கைப்பற்றும்.
மத்திய மண்டலத்தில் திமுக கூட்டணி 27, அதிமுக கூட்டணி 10, தவெக 0 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் மின்னம்பலம் நிறுவனம் கணித்துள்ளது.
ரிப்பப்ளிக் பி மார்க் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 125-145, அதிமுக கூட்டணி 60- 80, தவெக 18-24, மற்றவை 2-6 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 145-155, அதிமுக கூட்டணி 45-65, தவெக 7-9 இடங்கள் வரை கிடைக்கும் என சட்ட பஜார்ஸ் கணித்துள்ளது. திமுக கூட்டணிக்கு 36%, அதிமுக கூட்டணிக்கு 31%, தவெகவுக்கு 23%, பிற கட்சிகளுக்கு 10% வாக்கு கிடைக்கலாம் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவன கணிப்பில், திமுக கூட்டணி 120-140, அதிமுக கூட்டணி 60-70, தவெக 30-40, மற்றவை 0-4 எனக் கூறப்படுகிறது.
மாட்ரிஸ் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 122-132, அதிமுக கூட்டணி 87 -100, தவெக 12-16, நாதக 1-6 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த கருத்து கணிப்புகளின் அடிப்படையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


