ஐபிஎல் 19வது தொடரின் 41வது லீக் போட்டி மும்பை வான்கடே திடலில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக வில் ஜாக்ஸ், ரையான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த இணை பவர்பிளேவில் வீசப்பட்ட 6 ஓவர்களில் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தது.
அதன் பின், நிதிஷ்குமார் ரெட்டி வீசிய 8வது ஓவரில் வில் ஜாக்ஸ் (22 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி, 46 ரன்) தூக்கியடித்த பந்தை இஷான் கிஷன் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (5 ரன்), ஈஷான் மலிங்கா வீசிய 9வது ஒவரில், அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, நமன் திர் (22 ரன்), பிரபுல் ஹிங்கே வீசிய 14வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தபோதும், மறுபுறம் நிலையாக நின்று ஆடிக் கொண்டிருந்த ரிக்கல்டன், 44 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்னை எட்டினார். கடைசி கட்டத்தில், ரிக்கல்டன், கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை சேர்ந்து அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களின் அதிரடியால், 15.5 ஓவரில் மும்பை அணி 200 ரன்களை எட்டியது.
அடுத்து 19வது ஓவரை வீசிய ஷகிப் உசேன், ஹர்திக் பாண்டியாவை 31 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கல்டன் (55 பந்துகள், 8 சிக்சர், 10 பவுண்டரி) 123 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
சன்ரைசர்ஸ் தரப்பில் பிரபுல் ஹிங்கே, ஈஷான் மலிங்கா, ஷகிப் உசேன், நிதிஷ் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து பிரம்மாண்ட இலக்கான 243 ரன்னை சேஸ் செய்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை குவித்து அமர்க்களமான வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் தரப்பில் டிராவிஸ் ஹெட் 76, கிளாசன் 65(*), அபிஷேக் ஷர்மா 45 ரன்கள் எடுத்திருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் கசன்ஃபர் 2, டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


