மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடந்தது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 2 கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதே நேரம், பாஜகவும் கடுமையான பரப்புரையில் ஈடுபட்டது. இதற்கான பிரசாரம் ஏப்.27 மாலையுடன் நிறைவடைந்தது.
மே.வங்கத்தில் 2ம் கட்டமாக இன்று முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் உள்ளிட்ட 142 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பவானிபூரில் உள்ள மித்ரா பள்ளியில் மம்தா வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்த பின் பேட்டி அளித்த அவர், ‘‘மத்திய பாதுகாப்பு படைகளின் அட்டூழியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. இங்கு நடைபெறுவது துளியளவு கூட சுதந்திரமான நியாயமான தேர்தல் அல்ல. மத்திய படைகள் அரசியலமைப்பு சார்ந்த கடமையை செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மத்திய படைகள் சாமானிய மக்களையும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களையும் துன்புறுத்தி வருகிறது. இது ஜனநாயகத்தை சிதைப்பதற்கு சமம். இத்தேர்தலில் பாஜக முறைகேடு செய்ய முயற்சிக்கிறது’’ என்று சாடினார்.
இரண்டாம் கட்டத் தேர்தலில் கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ் ஆகிய 6 மாவட்டங்களில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் மற்றும் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையேயான கலவரத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது பதற்றம் நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாம் கட்ட தேர்தலில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அங்கு காலை 9 மணி நிலவரப்படி 18.39%, 11 மணி நிலவரப்படி 39.79%, மதியம் 1 மணி நிலவரப்படி 61.11%,பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68% வாக்குகள் பதிவான நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 89.99% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 93.18% வாக்குகள் பதிவான நிலையில், 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவில் 92.9% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021 தேர்தல் முடிவுக்குப் பிறகு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்ததால், தேர்தலுக்கு பிறகு அமைதி காப்பதை நோக்கமாக கொண்டு மத்திய படைகள் 60 நாட்கள் வரை மேற்கு வங்கத்தில் இருப்பார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


