தமிழ்நாட்டில் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் ’வெப்ப தாக்குதல்’ (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு வார்டு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் வெயில் அதிகபட்சமாக, திருச்சி 105, அரியலூர் 104, வேலூர் 103, ஈரோடு 102, மதுரை 101 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகி உள்ளது.
இது தவிர, கரூர், நாமக்கல், தருமபுரி, பாளையங்கோட்டை, சென்னை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நாளை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.


