மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே நேரம், பாஜகவும் கடுமையான பரப்புரையில் ஈடுபட்டது.
அங்கு 2ம் கட்டமாக 142 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற போது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டயமண்ட் ஹார்பரின் பல்தா பகுதியில் 4, மக்ரஹத் பாஸ்கிம் தொகுதியில் 11 இடங்களில், பாஜக வாக்காளர்கள் வாக்களிக்கத் தடுத்ததாக வந்த புகார்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) டேப் ஒட்டப்பட்டதான முறைகேடு தொடர்பான புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அந்த சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவித்து, மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டைமண்ட் ஹார்பரில் உள்ள 4, மக்ரஹத் பாஸ்கிம் தொகுதியில் 11 ஆகிய 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பலத்த கண்காணிப்பில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துணை ராணுவப்படையின் விரைவு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று முதல் 60 நாட்களுக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.


