இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 98.47% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திய பின்னர், அதனைத் திரும்ப பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, சந்தையில் ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வங்கிக் கிளைகளில் இந்த நோட்டுகளை மாற்றும் வசதி இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு செப்.30ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான வங்கிக் கிளைகளில் இந்த நோட்டுகளை மாற்றும் வசதி நிறுத்தப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து மாற்றிக் கொள்வதற்கான வசதி நடைமுறையில் உள்ளது.
மேலும், இந்திய அஞ்சல் துறை மூலமாகவும் எந்தவொரு தபால் அலுவலகத்திலிருந்தும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை அனுப்பி தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மிகக் குறைந்த அளவு மதிப்பிலானவையே மீதமுள்ளன. கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு வெறும் ₹5,451 கோடியாக குறைந்துள்ளது.
இந்த நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டாலும், அவை இன்னும் சட்டப்பூர்வமாகச் செல்லும் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.


