எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜன நாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.9ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பின், ஜன நாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது ஜன நாயகன் படத்திற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பிரச்சினை செய்வதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு மறுநாளே, விஜய்யின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில், தணிக்கை குழுவின் மறு ஆய்வில் உள்ள ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக கடந்த மாதம் 3ம் தேதி இணையதளத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக 9 பேரை கைது செய்த விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


