தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடந்தது. இதில் முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மமக, ஐயூஎம்எல், கொமதேக, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் 20க்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது தவிர, நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாதக கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.
இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்ட்ராங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் 3,300க்கும் மேற்பட்ட மேஜைகள் தயார் நிலையில் உள்ளன.
சுமார் 10,000 பணியாளர்கள் மற்றும் 4,600-க்கும் மேற்பட்ட நுண் பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். மையங்களுக்குள் செல்வதற்கு முதன்முறையாக ‘க்யூஆர் குறியீடு’ கொண்ட புகைப்பட அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள் சம்பந்தப்பட்ட முடிவுகளை results.cci.gov.in என்ற இணையதளத்திலும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


