தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி முடிவடைந்து, அதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மையங்களுக்குள் செல்வதற்கு முதன்முறையாக ‘க்யூஆர் குறியீடு’ கொண்ட புகைப்பட அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் காலை 11 மணி நிலவரப்படி, முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜயின் தவெக 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதைத் தொடர்ந்து திமுக 53 இடங்களிலும், அதிமுக 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், தபால் வாக்குப்பதிவிலும், மின்னணு இயந்திர வாக்குப்பதிவிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னிலையில் 3வது இடத்தில் உள்ளார்.
நாம் தமிழர் கட்சி இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாமலே உள்ளது. நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர் பின்னடைவில் உள்ளனர்.


