புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 89.87% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியும், காங்கிரஸ், திமுக கூட்டணியும், தவெக தனித்தும் களம் கண்டன. இதில், என்டிஏ மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இடையே நேரடி இருமுனை போட்டி நிலவியது.
புதுச்சேரியில் மொத்தம் 1,099 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், 30 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து 8.30 மணி முதல் இவிஎம்.மில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏற்றவாறு வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்று நிறைவடைந்ததும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார். அவர் முன்னாள் முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தை தோற்கடித்தார்.


