கேரளாவில் அங்குள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்.9ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணி நேரடி போட்டியில் இருக்கிறது. மற்றொரு புறம் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 883 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2026 கேரளம் மாநிலத் தேர்தலில் 79.63% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் எல்டிஎஃப் மற்றும் யுடிஎப் இடையே நேரடி இருமுனை போட்டி நிலவியது.
கேரளாவில் 43 இடங்களில் 140 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தொகுதிகளுக்கு ஏற்றவாறு வாக்கு எண்ணும் சுற்றுகள் மாறுபடும் நிலையில், அதிகபட்சமாக 14 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் ஒரு சுற்றில் எண்ணப்படும்.
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து இவிஎம்.மில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் காலை 12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி 96 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரி தலைமையிலான எல்டிஎப் கூட்டணி 42 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
கேரளாவில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகள் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில், காங்கிரஸ் 90க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிப்பது அங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


