மே.வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும், 2ம் கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்.29ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்தது.
இதில், 207 தொகுதிகளில் பாஜக, 80 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இருப்பினும், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரி சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், அந்நிய சித்தாந்தங்களின் செல்வாக்கினால் உருவான ஆட்சியிலிருந்து மே.வங்கத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சுவேந்து அதிகாரி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதைத் தொடர்ந்து, சுவேந்து முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கம் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவேந்து அதிகாரிக்கு அதிகாரி இன்று காலை 11 மணிக்கு கொல்கத்தாவில் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதன் மூலம். மே.வங்கத்தில் 15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதல் முறையாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது.


