நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணியை புதிய முப்படைகளின் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) நியமித்துள்ளது. அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார்.
கடந்த 1985ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த இவர், சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் உள்ள பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஆழமான அனுபவம் கொண்டவர்.
லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (என்எஸ்சிஎஸ்) ராணுவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, அவர் ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்தார். மேலும், அவர் சென்ட்ரல் கமாண்டின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப் என்ற பொறுப்பையும் வகித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.


