இந்தியக் கடற்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவர், வரும் 31ம் தேதி முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.
தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி மே 30ம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2028 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையில் இவர் ஆற்றிய சிறப்பான மற்றும் நீண்டகால சேவையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இவருக்கு இந்த உயரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
கடந்த 1987ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட முக்கிய போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் (என்டிஏ) முன்னாள் மாணவரான இவர், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார்.
இத்துடன் நாட்டின் ராணுவக் கட்டமைப்பில் மற்றொரு முக்கிய மாற்றமாக, தமிழ்நாட்டை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி (ஓய்வு) புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார்.


