தவெக விற்கு ஆதரவா? இல்லையா? என்று இன்று மாலை விசிக நிலைப்பாட்டை அறிவிக்கும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாமல் திணறி வருகிறது.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இதையடுத்து, விசிக தலைவர் திருமாவை தொடர்பு கொண்ட தவெக தலைவர் விஜய், ஆதரவு அளிக்குமாறு கோரியிருந்தார். ஆனால் திருமாவோ கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை பொறுத்தே தங்களது நிலைப்பாடு இருக்குமென்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 2 இடங்களை வைத்துள்ள விசிகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் தலைவர் திருமா இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளதாக கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நேற்று விசிக உயர்நிலை கூட்டம் இணைய வழியாக நடைபெற்றது. அதில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட அனைத்து அதிகாரமும் திருமாவளவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களது அனைத்து தகவல் உடன் மாலை முடிவை அவர் அறிவிப்பார் என்றார்.
இதனிடையே, விசிக எம்பி ரவிக்குமார் அவரது முகநூல் பதிவில், விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


