தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களை பெறாமல் இருந்தது.
இதையடுத்து தவெக தரப்பில் காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விசிக கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
அப்போது, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து கூட்டணி தர்மத்தை மீறி, முதல் கட்சியாக காங்கிரஸ் தவெகவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளித்தது.
இதைத் தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கம்யூ. கட்சிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிபந்தனையற்ற ஆதரவு அளித்தன.
அதுவரை கம்யூ. கட்சிகளின் ஆதரவை பொறுத்தே தங்களது முடிவு இருக்கும் என்று கூறி வந்த விசிக தலைவர் திருமாவும் நேற்று நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தார். இதையடுத்து, ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அதன் பிறகு, தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.
இதன்மூலம், தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாமல் 3வது கட்சியாக தவெக ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார்.
அதன் பின்னர் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவின் சக்ரவர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து விஜய் பதவியேற்கும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்துள்ளார்.
அவரை தவெக முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகரன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்று அரங்கிற்குள் அழைத்து சென்றனர்.


