தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகி, அதிமுக கடும் பின்னடைவை சந்தித்து, 47 இடங்களில் மட்டுமே வென்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இபிஎஸ் இழந்த நிலையில், இந்த தோல்வி அதிமுகவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தனித்தனியாக ஆலோசனை நடத்தியது பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் நடந்த கூட்டத்தில் 34 எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சி.வி. சண்முகம் தலைமையிலான குழுவில் எஸ்.பி. வேலுமணி, நன்னிலம் காமராஜ், ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஜோலார்பேட்டை கே.சி.வீரமணி, பாலக்கோடு கே.பி.அன்பழகன், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், லீமா ரோஸ் மார்ட்டின், அமமுக எம்எல்ஏ மன்னார்குடி காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தவிர சில எம்எல்ஏக்கள் இபிஎஸ்ஸை சந்தித்த பின்னர் சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு சென்றனர்.
இபிஎஸ் இல்லத்தில் ஆர்.பி.உதயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வேளச்சேரி அசோக், கே.பி.கந்தன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 16 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், கே.சி.கருப்பண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 13 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிகிறது.
மேலும், அதிமுக முக்கிய நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, எம்.பி.தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றதாகத் கூறப்படுகிறது.
அதிமுகவில் மொத்தம் 82 மாவட்ட செயலாளர்களும், 47 எம்எல்ஏக்களும் உள்ள நிலையில், இப்போது யார் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் சிவி சண்முகம் சட்டப்பேரவைக்கு வருகை தந்த போதும் பதவி ஏற்க அழைக்கும் போது அவர் அவையில் இல்லை. இதனால் இறுதியாக பதவி ஏற்று கொள்வார் என எதிர்பாரக்கப்படுகிறது.
அதே போல், இபிஎஸ் உறுதிமொழி ஏற்கும் போது ஒருசில அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே மேசையை தட்டி வரவேற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி உறுதிமொழி ஏற்கும் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மேசையை தட்டி வரவேற்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவில் நடக்கும் இரு விதமான ஆலோசனைக் கூட்டங்கள், இரு தரப்பு ஆதரவு அதிமுகவில் உட்கட்சிப் பூசலைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் இதனால் அதிமுக இரண்டாக பிரிகிறதா என்ற சந்தேகத்தையும் கலக்கத்தையும் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


