தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து நேற்று விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து, செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் எம்எல்ஏவாக பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில், பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், முதல்வர் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை பகல் 2.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் விஜய் 3.30 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் விஜய் திராவிட கழகத்தின் தலைவர் வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


