தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் எம்எல்ஏவாக பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, மற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். வெற்றி சான்றிதழ் எடுத்து வராத தவெக அமைச்சர் கீர்த்தனா, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை.
பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், முதல்வர் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை பிற்பகல் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்று கொண்ட விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக, தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் விஜயை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கு வந்து இன்முகத்துடன் ஆரத்தழுவி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்த முதல்வர் விஜய்யை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்று கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். இதையடுத்து வீட்டிற்குள் சென்ற முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து பரஸ்பரம் மரியாதை அளித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை மு.க.ஸ்டாலின் இல்லம் சென்ற முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் “காலத்தின் நிறம் ‘கருப்பு சிவப்பு’ – திமுக 75″ என்ற நூலை பரிசாக வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.


