தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொடங்கி, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு, அகர வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப்பட, சட்டப்பேரவையின் தலைமை செயலர் சீனிவாசன் முன்பு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்றனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் எம்எல்ஏவாக பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, மற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், சபாநாயகராக போட்டியிடும் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகரன் மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், அதனைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக, தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் விஜயை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கு வந்து இன்முகத்துடன் ஆரத்தழுவி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்த முதல்வர் விஜய்யை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்று கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். இதையடுத்து வீட்டிற்குள் சென்ற முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து பரஸ்பரம் மரியாதை அளித்தார்.
முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் “காலத்தின் நிறம் ‘கருப்பு சிவப்பு’ – திமுக 75″ என்ற நூலை பரிசாக வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்துக்கு சென்ற முதல்வர் விஜயை, துரை வைகோ ஆரத்தழுவி வரவேற்று சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்றார்.
அங்கு ஏறக்குறைய 10 நிமிடங்கள் வைகோவை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்த முதல்வர் விஜய் அவரிடம் வாழ்த்து பெற்றார். வைகோவும் விஜய்க்கு சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வைகோவின் உடல்நலம் குறித்து முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.
அதன் பிறகு, கைகோர்த்தபடி வெளியே வந்த முதல்வர் விஜயும் வைகோவும் சிரித்தபடியே தொண்டர்களை பார்த்து ஒன்றாக கையசைத்தனர். அப்போது தொண்டர்கள் ஆரவாரமிட்டு முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


