தவெக தலைமையிலான ஆட்சியில் இன்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர், முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தங்களது வீட்டிற்கு வந்த முதல்வர் விஜயை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கு வந்து இன்முகத்துடன் ஆரத்தழுவி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்த முதல்வர் விஜயை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்று கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். இதையடுத்து முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் பரஸ்பரம் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்தனர்.
முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “காலத்தின் நிறம் ‘கருப்பு சிவப்பு’ – திமுக 75″ என்ற நூலை பரிசாக வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்துக்கு சென்ற முதல்வர் விஜயை, துரை வைகோ வாசலுக்கு வந்து ஆரத்தழுவி வரவேற்று சால்வை மற்றும் மாலை அணிவித்து அழைத்து சென்றார்.
அங்கு வைகோ, முதல்வர் விஜய் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பரஸ்பரம் மரியாதை செய்தனர். பின்னர் வைகோவின் உடல்நலம் குறித்து முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.
அதன் பிறகு, கைகோர்த்தபடி வெளியே வந்த முதல்வர் விஜயும் வைகோவும் சிரித்தபடியே தொண்டர்களை பார்த்து ஒன்றாக கையசைத்தனர். அப்போது தொண்டர்கள் ஆரவாரமிட்டு முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் நீலாங்கரை அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை அன்புமணி, சௌமியா வாசலுக்கு வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பிறகு, வீட்டிற்குள் சென்ற விஜய், அன்புமணி பரஸ்பரம் சால்வை அணிவித்தனர். விஜய் அன்புமணிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து குடும்பத்தினர் அனைவரும் விஜயுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க புறப்பட்டார்.


