தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, ஏற்கனவே ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய நபர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பாகும்.
இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பெற்ற 55 பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் 10க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
இந்த பாதுகாப்பில் கமாண்டோக்கள் உயரிய ரகமான எம்பி 5 வகை நவீன துப்பாக்கிகள், குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் முன்பும் பின்பும், பைலட் வாகனங்களுடன் கூடிய பாதுகாப்பு வழங்கப்படும்.
இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் முதல்வர் விஜய் எப்போதும் 3 அடுக்கு பாதுகாப்பு கண்காணிப்பில் இருப்பார். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது தனிப்படை பாதுகாப்பு மட்டுமல்ல, மிக நெருங்கிய கண்காணிப்பு மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பை கடந்து முதல்வரை யாரும் எளிதில் அணுகவோ அல்லது கான்வாயில் நுழையவோ முடியாது.
நாட்டின் உயரிய பாதுகாப்பான எஸ்பிஜி பாதுகாப்பு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் வழங்கப்படுகிறது. முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, தேவைக்கேற்ப பாதுகாப்பு அளிப்பதும் இதன் பணியாகும்.
அதற்கு அடுத்த பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு நாட்டின் 2வது மிக உயர்ந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிறகு, அடுத்தப்படியாக தற்போது முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு மத்திய உளவுத்துறை அறிக்கையின்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக முதல்வருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


