சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை, 4 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் கிராம் ரூ.14,150க்கும் சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.
வாரத்தின் தொடக்க நாளான நேற்று (மே 11) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து கிராம் ரூ.14,100க்கும் விற்பனையானது.
இந்நிலையில், 22 காரட் தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.230 அதிகரித்து கிராம் ரூ.14,330க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.285க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.300க்கும் கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.15,000 உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


