தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், தவெக சார்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தவர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர்.
தவெக தலைவர் விஜய் இவரது அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நேற்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இவர் எம்எல்ஏவாக பதவியேற்ற போது எழுந்து நின்று கைகூப்பி மரியாதை அளித்தார்.
இவர் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னதாக, கடந்த 2011ல் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் அன்பழகன் கே. என்பவரை விட 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய நேற்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், சபாநாயகர் தேர்தலில் வேறு யாரும் போட்டி வேட்புமனுவை தாக்கல் செய்யாததால், சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்எல்ஏவான ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக திருச்சி துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏ ரவியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


