தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார்.
தவெக தலைமையிலான ஆட்சியில் நேற்று தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட விஜய் உள்ளிட்ட வெற்றி பெற்ற தவெக, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வராக பொறுப்பேற்ற விஜய், முதல் 3 கையெழுத்தில் போதை ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வழிபாட்டு தலங்கள் கல்வி நிலையங்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் சுற்றி 500 மீட்டர் வரை உள்ள கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 276 கடைகளும், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 186 கடைகளும், பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு முதல்வர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜயின் இந்த நடவடிக்கை தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


